ரகு தாத்தா படப்பிடிப்பு நிறைவு: வைரலாகும் கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்!

தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) திருப்புமுனையாக அமைந்தது.
இதனையடுத்து கமர்ஷியல் படங்களுடன் தனி கதாநயாகியாகவும் படங்களில் அசத்தி வருகிறார். அப்படி அவர் தனி கதாநாயகியாக நடித்த மிஸ் இந்தியா, பென்குயின் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை எனினும் சாணிக் காயிதம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா படத்தில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்ததிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ள மாமன்னன் படம் விரைவில் வெளியாக உள்ளது.
கே.ஜி.எஃப்., காந்தாரா படத்தினை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கீர்த்தி சுரேஷின் புதிய பட போஸ்டரை வெளியிட்டு, “புரட்சி குடும்பத்தில் இருந்துதான் தொடங்குகிறது. தயாராகுங்கள்” என தமிழில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ‘ரகு தாத்தா’ படம் பற்றி அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இசை ஷான் ரோல்டன். ஒளிப்பதிவு- யாமினி யோக்னாமூர்த்தி.