மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.அசாம், மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 294 இடங்களில் 30 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 21 பெண் வேட்பாளர்கள் உள்பட 191 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலுக்கான போட்டியில் உள்ளனர்.
இதைப்போல அசாமில் மொத்தமுள்ள 126 சட்டசபை தொகுதிகளில் 47 இடங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. குறிப்பாக அப்பர் அசாம் மற்றும் பிரம்மபுத்ரா நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ள 12 மாவட்டங்களுக்கு உட்பட்ட 47 தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது. இங்கு 23 பெண்கள் உள்பட 264 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலுக்கான போட்டியில் உள்ளனர்.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியதில் இருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. கொரோனா காலம் என்பதால் வாக்குப்பதிவு செய்யும் நேரம் , 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.