போயஸ்கார்டனில் சசிகலா…!

சசிகலா நீண்ட நாட்களுக்குப் பிறகு போயஸ்கார்டன் சென்று அங்குள்ள விநாயகரையும், சிவபெருமானையும் தரிசனம் செய்துள்ளார். வேதா நிலையத்தின் வாசல் அருகே சசிகலாவின் கார் சென்ற போது பழைய நினைவுகள் கண் முன் வந்து சென்றுள்ளது.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரைக்கும் சசிகலாவிற்கு வேதா நிலையம்தான் இருப்பிடம். ஜெயலலிதா மறைந்த பிறகும் தனியாக வேதா நிலையத்தில் வாழ்ந்து வந்த சசிகலாவை அவரது உறவினர்கள் அரசியல் பிரமுகர்கள் வந்து சந்தித்து சென்றனர்.அதிமுக பொதுச்செயலாளராக அறிவித்துக்கொண்ட சசிகலா முதல்வராகவும் ஆசைப்பட்டார். ஜெயலலிதாவை அம்மா என்று அழைத்த வாயால் சின்னம்மா என்று அழைத்தனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து சென்னை தி.நகரில் தங்கி இருக்கும் சசிகலா ஜெயலலிதாவின் நினைவு இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவார் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர்.ஆனால் அவர் இதுவரை அங்கு செல்லவில்லை. கோவிலுக்கு மட்டும் சென்று வந்துள்ளார்.

கடந்த 19-ந் தேதி சென்னை திரும்பிய சசிகலா திடீரென நேற்று காலை 6 மணியளவில் போயஸ் கார்டனுக்கு சென்றார். ஜெயலலிதாவின் வீட்டு வாசல் அருகே ஒரு விநாயகர் கோவில் உள்ளது. அந்த கோவில் முன்பு காரை விட்டு இறங்கி விநாயகரை தரிசித்தார்.போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா நிலையம் தற்போது அரசு உடமையாக்கப்பட்டு நினைவு இல்லமாக மாற்றப்பட்ட பிறகு இதுவரை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி இல்லை என்பதால் சசிகலா அங்கு செல்லவில்லை. அந்த வீட்டை பார்த்தபடி சாமி தரிசனம் செய்தார்.