முதல்வர் ஸ்டாலினை சந்தித்த #வடிவேலு !அரசியலில் ரீ என்ட்ரி கொடுப்பாரா ?

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கரோனா சூழலை எதிர்கொள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கலாம் என ஏற்கனவே முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவி வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று (14.07.2021) தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கரோனா நிவாரண நிதியாக 5 லட்சம் ரூபாயை வழங்கினார்.
பின்னர் தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் நடிகர் வடிவேலு கூறியதாவது: ஒரே மாதத்தில் உலகமே உற்றுப்பார்க்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார்.
”உலகமே உற்றுப் பார்க்கும் அளவிற்கு கரோனாவை முதல்வர் ஸ்டாலின் கட்டுப்படுத்தியுள்ளார். மகளிருக்கு இலவச பேருந்து பயணம், குடும்ப தலைவிகளுக்கு ரூ1,000 நிதி உதவி என ஒவ்வொரு திட்டங்களையும் மிக அழகாக நிறைவேற்றி வரும் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவரும் முன்வந்து கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்றார்.