‘இனி படத்தில் நடிக்க மாட்டேன்’: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!!

இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை பேட்டியளித்துள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற விழாவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதிவியேற்றார்.
அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணத்துடன், ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. வாரிசு அரசியல் என விமர்சிப்பது எனக்கு புதிதல்ல. எனது செயல்களின் மூலம் விமர்சனங்களுக்கு பதிலளிப்பேன்.
விளையாட்டின் தலைநகரமாக தமிழகத்தை மாற்றுவேன். அனைத்து தொகுதிகளிலும் ஒரு மைதானம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் பணியை முதலில் செய்வேன்.இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை. நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருந்த படத்திலிருந்து விலகுகிறேன். இயக்குநர் மாரி செல்வராஜின் மாமனிதன் படமே கடைசி படம் என்றார்.