“வீதிகள் வெறிச்சோடி உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்!” – மு.க.ஸ்டாலின்!

 “வீதிகள் வெறிச்சோடி உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்!” – மு.க.ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் மே 2ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளும், சில மாநிலங்களில் நடந்த சட்டமன்ற மற்றும் மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் மே 2ஆம் தேதி எண்ணப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்.

அதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (30/04/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் விரைவில் வெளிவரப் போகும் தருணத்தை எதிர்பார்த்துக் கட்சியைச் சார்ந்தவர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதை நான் அறிவேன்.

வாக்களிப்பதற்கு முன்பும் வாக்களித்த பின்பும் தமிழ்த் திருநாட்டின் வாக்காளப் பெருமக்களிடம் பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளில், திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றும் என்கிற உற்சாகமான தகவல் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றது. தமிழகமோ பெருந்தொற்றின் காரணமாகத் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.

படுக்கைகள் கிடைக்காமலும், உயிர் வாயு கிடைக்காமலும் நோயாளிகள் அவதிப்படும் நிலையை ஊடகங்களில் பார்த்து நான் பதைபதைத்துப் போகிறேன்.

இந்தச் சூழலில் வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்தோ, சாதகமான முடிவுகள் வரவர ஒன்றுகூடியோ, நம் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் நோக்கத்தில் பெருந்தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தச் சூழலில் இல்லங்களிலேயே இருந்து தேர்தல் முடிவுகளை ஊடகங்களின் மூலம் தெரிந்துகொள்வதும், வெற்றியடைந்த செய்தியைக் கேட்டு நம் இல்லத்திலேயே மகிழ்வதும்தான் பொருத்தமான போக்கு.

கட்சி வெற்றியைக் கொண்டாடுவதைவிட உடன்பிறப்பின் உயிரைப் பாதுகாப்பதுதான் என்னுடைய தலையாய நோக்கம் என்பதைப் புரிந்துகொண்டு, நம் கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, தமிழக மக்கள் யாருமே இத்தகைய அலட்சியப்போக்கால் அவதிப்படக் கூடாது என்று மாற்றுக் கட்சித் தொண்டர்களுக்கும் என்னுடைய வேண்டுகோளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வீதிகள் வெறிச்சோடட்டும், உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும்.” இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 • 10 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !