பங்குனி பெளர்ணமியும் உத்திரமும் இணைந்த அற்புதமான நாள்!

பங்குனி மாதம் வரும் பௌர்ணமியில் நம்முடைய குலதெய்வத்தினை வணங்குவது நமது மரபு. நம் வேண்டுதல்களை குலதெய்வம் நிறைவேற்றித் தரும். குலத்தைக் காக்கும். சகல ஐஸ்வர்யங்களுடன் நம்மை வாழவைக்கும்.28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பங்குனி உத்திரம். இந்த நன்னாளில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வோம்.
குலதெய்வ வழிபாடு என்பது அவரவர்களுடைய முன்னோர்கள் பல தலைமுறைகளாய் வழிபட்டு வந்த தெய்வமாகும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவேத் திகழும் என்பது ஐதீகம். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது.சிறு தெய்வம் என்று அலட்சியப்படுத்தக்கூடாது. குலதெய்வங்கள், கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாகஇருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு என்கின்றன ஞானநூல்கள்.
பொதுவாக ஒவ்வொரு மாத பெளர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் பங்குனி பெளர்ணமி, குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்துகிற விசேஷமான நன்னாள். பங்குனி பெளர்ணமியும் உத்திரமும் இணைந்த அற்புதமான நாள் குலதெய்வ வழிபாட்டுக்கு ரொம்பவே உன்னதமான நாள். இந்த நாளில், நம் வீட்டைச் சுத்தப்படுத்தி, குலதெய்வப் படங்களுக்கு மாலைகளிட்டு அலங்கரித்து, இனிப்பு மற்றும் உணவுடன் படையலிட வேண்டும்.