தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா ! 2000ஐ கடந்த வைரஸ் பாதிப்பு…

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2,000-த்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் 1.38 லட்சம் படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக உள்ளன. இவற்றில் 56 ஆயிரத்து படுக்கைகள் மருத்துவமனைகளிலும் 79 ஆயிரம் படுக்கைகள் கொரோனா பராமரிப்பு மையங்களிலும் உள்ளன. தொற்று பரவல் குறைவாக இருந்தபோது பராமரிப்பு மையங்கள் மூடப்பட்டிருந்தன. எனவே கொரோனா நோயாளிகள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் தற்போது பரவல் அதிகமாகி வருகிறது. எனவே பராமரிப்பு மையங்களும் அனைத்து மாவட்டங்களிலும் திறக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 524 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,55,085ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 91 சதவீதமாக இருந்து வருகிறது.கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நேற்று 14 பேர் உயிரிழந்துள்ளனர் . இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12,684ஆக அதிகரித்துள்ளது.தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 13,983ஆக உள்ளது.. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.