தமிழக சட்டசபை தேர்தல்- வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது!

 தமிழக சட்டசபை தேர்தல்- வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது!

மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.சென்னையில் 16 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ராணி மேரி, லயோலா, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.சென்னையில் உள்ள 3 மையங்களிலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இதற்காக அதிகபட்சமாக 4 மேஜைகள் போடப்படுகின்றன. ஒரு மேஜையில் 500 தபால் வாக்குகள் வரை எண்ண ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மின்னணு வாக்குகள் 14 மேஜைகள் போடப்பட்டு எண்ணப்படும். ஒரு மேஜைக்கு ஒரு நுண்பார்வையாளர் வீதம் இருப்பார்கள். சென்னையில் மட்டும் ஆயிரத்து 248 ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள்.காலை 9.30 மணிக்கு முதல் சுற்று முடிவுகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் வாக்குகள் எண்ணப்படுவதால் இந்த முறை முழு முடிவுகள் வெளியாக நள்ளிரவு 12 மணியாகலாம் என்று கூறப்படுகிறது. உடனுக்குடன் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வாக்கு எண்ணிக்கை விவரங்களை பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் தேர்தல் அலுவலர்கள், முகவர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனையில் 98.6 டிகிரி பதிவானால் அனுமதி அளிக்கப்படாது.

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு கருதி 24 மணி நேரமும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

முகவர்கள் தங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கிருமிநாசினி, முக கவசம் வினியோகம் செய்ய சுகாதார குழுவினரின் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் அறைகளுக்கு முகவர்கள் செல்ல பிரத்யேகமாக தடுப்பு கட்டைகள் மூலம் வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கையை பார்வையிடவரும் உயர் தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் அமர்வதற்காக வரவேற்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.மேலும், வாக்கு எண்ணிக்கையை பதிவு செய்ய வரும் நிருபர்கள், புகைப்பட கலைஞர்கள், தொலைக்காட்சியினருக்கு பிரத்யேக அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் எல்.இ.டி. டி.வி.கள் பொருத்தப்பட்டுள்ளன.

  • 1 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !