‘அதிகாரத்துக்கு எதிரான வாழ்வியல் போராட்டத்தின் அழுத்தமான பதிவு’ #விடுதலை பாகம் 1 படம் எப்படி இருக்கு? ட்விட்டர் ரிவியூ இதோ!

பன்னாட்டு நிறுவனத்துக்கு மலை கிராமம் ஒன்றில் கனிம வள சுரங்கம் அமைக்க அரசு கொடுக்கும் அனுமதியை எதிர்த்து அப்பகுதியில் உள்ள தமிழர் மக்கள் படை நடத்தும் போராட்டமும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும்தான் ‘விடுதலை பாகம் 1’ திரைப்படத்தின் ஒன்லைன். எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மூலக்கதையாக கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் படம். இதில் விஜய் சேதுபதி, சூரி, கவுதம் மேனன், ராஜீவ் மேனன், பவானிஸ்ரீ, சேத்தன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
அருமபுரி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலை கிராமங்களில் கனிம வள சுரங்கம் தோண்ட ஒரு பன்னாட்டு கம்பெனியுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிடுகிறது அரசு. அரசு உத்தேசிக்கும் இந்தத் திட்டத்திற்கு அப்பகுதியில் உள்ள தமிழர் மக்கள் படை இயக்கம் எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுகிறது. தமிழர் மக்கள் படையை கைது செய்ய முயற்சிக்கும் அரசு போலீஸாரைக் கொண்டும், மலை கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி மக்கள் படை இயக்கத்தை கூண்டோடு அழிக்க முயற்சிக்கிறது. இதில் இரண்டு தரப்பிலும், உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன. இந்தப் போராட்டத்தில் வென்றனரா? மக்கள் படையை காவல் துறை கைது செய்கிறதா? இல்லையா? – இதுதான் படத்தின் திரைக்கதை.