பொன்னியின் செல்வன் -2′ டிரைலர் லோடிங்.. வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ!!
ஆஸ்கர் விருதைத் தொகுத்து வழங்க அமெரிக்காவுக்குப் புறப்பட்டார் தீபிகா படுகோன்!

95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தொகுத்து வழங்கவுள்ள நிலையில், இன்று அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். திரைத்துறையில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் மார்ச் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலுமிருந்து திரைத்துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில், ஆஸ்கர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்களின் பட்டியலை ஆஸ்கர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் தீபிகா படுகோன் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனை தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்துள்ளார்.
ஆஸ்கர் விருதுகளுக்காக விமான நிலையத்தில் தீபிகா புறப்பட்ட புகைப்படமும், அவரது கணவரும், நடிகருமான ரன்வீர் சிங் அவரை விமான நிலையத்தில் இறக்கிவிடும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. தீபிகா படுகோனுடன், ரிஸ் அகமது, எமிலி பிலன்ட், ட்வானே ஜான்சன் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற நடுவர்களில் ஒருவராகவும் தீபிகா படுகோன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் நாட்டு கூத்து பாடல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரு ஆவணப்படங்களும் ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் உள்ளது. இதற்கிடையே இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் ஆஸ்கர் விழாவைத் தொகுத்து வழங்குவது கூடுதல் அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.