“ராஷ்மிகா கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருந்திருப்பேன்” – ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஃபர்ஹானா’. இப்படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்துக்கு செல்வராகவன், கார்த்தி உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் படக்குழுவினரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியான நிலையில் மத உணர்வுகளுக்கு எதிராக உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று சில இஸ்லாமிய அமைப்புகள் கூறி வந்தன. இதையடுத்து படத் தயாரிப்பு நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு, “ஃபர்ஹானா திரைப்படம் எந்த மதத்திற்கும், உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல” என அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து திருவாரூரில் உள்ள 1 திரையரங்கில் எதிர்ப்பின் காரணமாக இப்படத்தை திரையிட மறுத்துவிட்டனர். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு நேர்காணலில் தெலுங்கு சினிமா குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ளார். அவர் பேசுகையில், “எனக்கு தெலுங்கு திரையுலகம் பிடிக்கும். ஆனால் மீண்டும் ஒரு நல்ல தெலுங்கு படத்தில் நடிக்க விரும்புகிறேன். நல்ல கதாபாத்திரங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். புஷ்பா படத்தில் ராஷ்மிகாவின் ஸ்ரீவல்லி கதாபாத்திரம் எனக்கு பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். அந்த வாய்ப்பு எனக்கு வந்திருந்தாள் கண்டிப்பாக நான் நடித்திருப்பேன். ராஷ்மிகா ஸ்ரீவல்லியாக நன்றாக நடித்திருந்தார். ஆனால் நான் அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பேன் என நம்புகிறேன்” என்றார்.