கொரோன காலத்தில்… பெரிய நெல்லிக்காய்!

பெரிய நெல்லிக்காய் பெருமளவு வைட்டமின் `சி’ நிறைந்தது என்பது நமக்கெல்லாம் தெரியும் என்றாலும், கொரோனா காலகட்டத்தில்தான் பெரிய நெல்லிக்காயின் மகத்துவமும் அது தருகிற நோய் எதிர்ப்பு சக்தியும் பரவலாகத் தெரிய ஆரம்பித்தது.
அமிர்தமே என்றாலும் அளவுடன்தான் சாப்பிட வேண்டும் அல்லவா..? அதனால் இந்தக் கட்டுரையில் பெரிய நெல்லிக்காயின் பலன்களுடன், யார் எந்த அளவுக்கு அதைச் சாப்பிட வேண்டும் என்பது பற்றியும் பேசவிருக்கிறோம். இதுகுறித்து சொல்கிறார்கள் இயற்கை மருத்துவர் யோ.தீபாவும் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணனும்.
“நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். உடம்பில் இருக்கிற ரணங்களை சீக்கிரமாக ஆற்றும். வயிற்றுப் புண்களைக் குணமாக்கும். இதயத்துக்கும் நல்லது.
சிறுநீரக கோளாறுகளை நீக்குகிறது. சருமங்களில் ஏற்படும் சுருக்கங்கள், சொறி, சிரங்கு உள்பட அனைத்து விதமான தோல் வியாதிகளையும் போக்கி, சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.
நோய்த்தொற்றுகள் வராமல் காக்கும். நம் உடம்பில் வளர்சிதை மாற்றம் நிகழும்போது ஒவ்வொரு செல்லில் இருந்தும் கழிவுகள் வெளியேறும். இந்தக் கழிவுகள் வெளியேறவில்லை என்றால், உடலில் வீக்கம் ஏற்படுவதில் ஆரம்பித்து புற்றுநோய் வரை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.
பெரிய நெல்லிக்காயில் உள்ள பாலிபினால், டேனின், ஃப்ளேவினாய்ட்ஸ் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து மேலே சொன்ன பிரச்னைகள் வராமல் தடுப்பவை.
குழந்தைகளுடைய வாட்டர் பாட்டிலில் ஒரு நெல்லிக்காயை கட் பண்ணிப் போட்டு, அதில் தண்ணீரை ஊற்றி விடலாம். நெல்லிக்காய் ஊறிய இந்தத் தண்ணீரைக் குடித்தாலே குழந்தைகளுக்குப் போதுமான வைட்டமின் `சி’ கிடைத்துவிடும். ஆனால், குழந்தைகளுக்கு மாலை 5 மணிக்கு மேல் நெல்லிக்காய் சாப்பிடக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.