‘பொம்பள புள்ளைய உசுறே இல்லாத பொருளாதான் பாப்பீங்களா’ – சாம் ஜோன்ஸ், ஆனந்தி நடிப்பில் #நதி ட்விட்டர் விமர்சனம்!

மாஸ் சினிமாஸ் சார்பில், சாம் ஜோன்ஸ் நடித்து தயாரிக்க, இயக்குநர் தாமரைசெல்வன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நதி. இப்படத்தில் நாயகியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார்.
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சாம் ஜோன்ஸ் அவரது மாஸ் சினிமாஸ் நிறுவனம் மூலமாகவே தயாரித்து இருக்கிறார்.
சாதியத்திற்கும், அரசியலுக்கும் நடுவில் சிக்கிக்கொண்ட இளைஞனின் வாழ்க்கை எப்படியெல்லாம் திசைமாறுகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன்.பேட்மிண்டன் போட்டியில் தேசிய அளவில் வெற்றிபெற்று அரசு வேலைக்கு சென்று குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்ற கனவுடன் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கிறார் நாயகன் சாம் ஜோன்ஸ்.
அரசியல் செல்வாக்குடனும், சாதி வெறியையும் பற்றிக்கொண்டிருக்கும் குடும்பத்தில் பிறந்த நாயகி கயல் ஆனந்தியும் அதே கல்லூரியில் நுழைய, இருவரின் நட்புக்கும் காதலுக்குமிடையே உறவு ஊசலாடுகிறது.
இந்த உறவை காதல்தான் என தீர்மானிக்கும் சாதிய ஆதிக்க கூட்டத்தின் நடுவே சில அரசியல் தகிடுதத்தங்கள் நடக்க, இறுதியில் தன்னுடைய கனவை நாயகன் எட்டிப்பிடித்தானா? நாயகியின் காதல் கைகூடியதா? இருவரையும் சாதிய ஆதிக்க கூட்டம் என்ன செய்தது என்ற புள்ளிக்கு வளைந்து, நெளிந்து நம்மை அழைத்துச்செல்லும் படம் தான் ‘நதி’.