கரோனா நிவாரணம்! 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி!

 கரோனா நிவாரணம்! 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி!

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. மேலும், கரோனாவால் பாதித்தவர்களுக்கு, வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட், பாண்ட்யா சகோதரர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்தனர்.

இந்த நிலையில், கரோனா நிவாரணப் பணிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆகியோர் ‘கெட்டோ’ என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஆன்லைன் மூலமாக ரூ. 7 கோடி நிதி திரட்டி அளிக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கு தங்களது பங்களிப்பாக விராட் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் இணைந்து ரூ. 2 கோடி வழங்கியுள்ளனர். இந்த நிதியுதவி இந்தியாவில் கரோனாவினால் பாதித்தவர்களின் சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ தேவைகளுக்கு தொண்டு நிறுவனம் மூலம் செலவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விராட்கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதி நேற்று (07.05.2021) சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டு பேசியுள்ளனர்…

“தற்போது இந்தியாவில் மிகவும் கடினமான சூழ்நிலை நிலவி வருகிறது. கரோனாவுக்கு எதிராக நாம் போராடி வருகிறோம். கரோனாவினால் நமது நாடு இதுபோல் பாதித்திருப்பதைப் பார்ப்பதற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

இதனால்தான் நாங்கள் இந்த நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறோம். இந்த நிதி கரோனா நிவாரணப் பணிகளுக்கு அளிக்கப்படும். இந்த முயற்சியில் நீங்கள் எல்லோரும் இணைவதுடன், உங்களால் முடிந்த நன்கொடையை அளிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் இந்தப் போராட்டத்தில் வெற்றிபெற முடியும். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று கூறியுள்ளனர்.

 • 20 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !