காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக 1941 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி – தெற்கு வெள்ளாறு இணைப்புத் திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டிக் கால்வாய் வெட்டும் பணியைத் தொடக்கி வைத்தார்.
காவிரி – வைகை – குண்டாறு ஆகியவற்றை இணைப்பதன் மூலம் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு நீர்ப்பாசனம் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாகக் கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரை 118 கிலோமீட்டர் தொலைவுக்குக் கால்வாய் வெட்டும் திட்டம் ஆறாயிரத்து 941 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் நடைபெற்றது.
விழாவுக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அமைச்சர்கர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பாஸ்கரன், ராஜேந்திர பாலாஜி ஆகியோரும், விவசாயிகளும் நூற்றுக்கு மேற்பட்ட டிராக்டர்களுடன் சென்று வரவேற்றனர். அதன்பின் விழா நடைபெறும் இடம் வரை டிராக்டரிலேயே அழைத்து வந்தனர்.