தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. போராட்டத்தின் மீது மத்திய , மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க இன்று முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. அப்போது தூத்துக்குடி ஆட்சியரகத்தை முற்றுகையிட பேரணியாக மக்கள் செல்ல முடிவு செய்தனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தை 18 கிராம மக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசினர். மேலும் திருச்செந்தூர் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட 3 டூவீலர்களை கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் போர்க்களமாக மாறி வருகிறது. ஆனால் பொது மக்கள் நேர்மையான முறையில் பேரணி நடத்தியதாகவும் காவலர்கள் முதலில் தாக்கி கலவரத்தை உண்டுபண்ணியதாகவும் கூறப்படுகிறது. காவலர்கள் அத்து மீறியதால் பொது மக்கள் பலர் காயமடைந்ததாகவும் ஒருவர் இறந்ததாகவும் தகவல் வந்துள்ளது.