நேற்று சந்தானம் நடிப்பில் உருவாகும் ஏ1 படத்தின் இரண்டாவது டீஸர் வெளியானது. இந்த படம் வருகிற 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் நான்காவது சீஸன் வின்னர் ஜான்ஸன் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷனருக்கு இந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராமரவிக்குமார் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பது. “நடிகர் சந்தானம் நடிப்பில் தயாரிக்கப்பட்ட ஏ1 (அக்யூஸ்ட் நம்பர் ஒன்) திரைப்படத்தின் 2-வது டீசர் வெளியாகி இருக்கிறது.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்து சாதி சிறுபான்மையினராக இருக்கும் பிராமண சமுதாய வாழ்க்கை முறையை கேலி செய்யும் விதத்தில் டீசர் வெளியாகியிருக்கிறது. இது போன்று பிற சாதி பெண்களை பிற சாதிகளின் பழக்க வழக்கங்களை இழிவுபடுத்தி யாரும் படம் எடுக்க முடியாது. அப்படி இருக்கையில் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்திய இந்த திரைப்படத்தை தடை செய்து நடிகர் சந்தானம், ஜான்சன், ராஜநாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.