ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில், பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணி, உருகுவே அணியை எதிர்கொண்டது. முதல் வினாடியில் இருந்தே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தில் ஈடுபட்டனர். 6-வது நிமிடத்தில் ரொனால்டோ இலக்கை நோக்கி அடித்த பந்து தாழ்வாக ஓடி நேராக உருகுவே கோல் கீப்பர் பெர்னாண்டோ முஸ்லெராவின் கையில் சிக்கியது. 7-வது நிமிடத்தில் உருகுவே முதல் கோல் போட்டது. சக வீரர் லூயிஸ் சுவாரஸ் தூக்கியடித்த பந்தை உருகுவேயின் எடின்சன் கவானி தலையால் முட்டி சரியாக கோலுக்குள் அனுப்பினார்.
இதனால் உருகுவே 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பதிலடி கொடுக்க போராடிய போர்ச்சுகல் வீரர்களின் முயற்சிக்கு முதல் பாதியில் பலன் இல்லை. இரண்டாவது பாதியில் போர்ச்சுக்கல் அணி ஒரு கோல் போட்டது. ஆனால் போர்ச்சுகல் வீரர்களின் உற்சாகம் அதிக நேரம் நீடிக்கவில்லை. 62-வது நிமிடத்தில் கவானி மீண்டும் ஒரு அற்புதமான கோல் போட்டு அசத்தினார்.
பென்டாகுர் குறுக்கே தட்டிக்கொடுத்த பந்தை கவானி, வலுவாக ஓங்கி உதைத்த போது, அது வளைந்து கோலுக்குள் புகுந்தது. 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில் உருகுவே வீரர்கள் தடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தினர். பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.
போர்ச்சுகல் அணி தனது கடைசி 4 உலக கோப்பை போட்டிகளிலும் நாக்-அவுட் சுற்றில் வெற்றி பெற்றதில்லை சோகம் இந்த தொடரிலும் தொடருகிறது. மேலும் நாக் அவுட் சுற்றில் முன்னணி வீரரான ரொனால்டோ இதுவரை கோல் போட்ட வரலாறு கிடையாது.