கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகம்கொண்டவர் கவிபேரசு வைரமுத்துவாகும். இவரது பாடல் வரிகளுக்காக, சிறந்த பாடலாசிரியர் விருதுக்கான தேசிய விருதை ஏழுமுறை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் அதிக முறை தேசிய விருது பெற்ற பாடலாசிரியர்களில் வைரமுத்து முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்னிலையில் கவிஞர் வைரமுத்துவின் படைப்பாற்றலில் நாவல் கள்ளிக்காட்டு இதிகாசமும் ஒன்றாகும். கடந்த 2003-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்த நாவலை, சாகித்ய அகாடமி 23 மொழிகளில் மொழிபெயர்த்து வருகிறது. முதல் மொழியாக இந்தி மொழியில் நாகபானி வன் கா இதிகாஸ் என்ற பெயரில் மொழியறிஞர் எச்.பாலசுப்பிரமணியன் மொழிபெயர்த்து இருக்கிறார்.
சாகித்ய அகாடமியால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அந்த புத்தகமானது, தற்போது இந்தியில் வெளிவந்த இந்தியாவின் சிறந்த புத்தகம் என்ற விருதை பெற்று இருக்கிறது. இந்திய வர்த்தக கூட்டாண்மை கழகம் (எப்.ஐ.சி.சி.ஐ) இந்த விருதை வழங்க இருக்கிறது. மத்திய அரசின் கலாசார துறை அமைச்சகம் இந்த தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது.
இந்தி தவிர ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளின் மொழிபெயர்ப்பு பணிகள் நிறைவடைந்து உள்ளன. விரைவில் அவை வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் கள்ளிக்காட்டு இதிகாசத்தின் மொழிபெயர்ப்பு விரைவில் வெளிவரும் அதிகாரபூர்வமாக கூறப்பட்டுள்ளது.