ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் இந்தியன் ஆகும். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது.
இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இன்னிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்தியன் 2 படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கிறார் என கூறப்படுகிறது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான துல்கர் சல்மானுக்கு தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு இருப்பதால் அவ்வப்போது தமிழ் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழில் இவருடைய நடிப்பில் இறுதியாக சோலோ, நடிகையர் திலகம் போன்ற படங்கள் வெளியானது. இதன் பிறகு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்திலும் ஆர்ஏ கார்த்திக் இயக்கத்தில் வான் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் அடுத்ததாக நடிகர் மற்றும் அரசியல்வாதியான கமல் ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 வில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரமாண்ட இயக்குனரான சங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாராவும் மற்றொரு நாயகியாக காஜல் அகர்வாலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தின் செட் ஒர்க் இன்று பூஜையுடன் துவங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை படக்குழு அதிகாரபூர்வமாக புகைப்படதுடன் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.