ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. செங்கோல் மற்றும் சர்கார் ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் கூறினார்.
முழுமையாக திரைக்கதையை படிக்காமல், படமும் பார்க்காமல் எப்படி சொல்லலாம் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இன்னிலையில் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர் அமர்வு முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. விசாரணையை நேரில் பார்ப்பதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பாக்யராஜ் ஆகிய இருவரும் வந்திருந்தனர்.
இந்த வழக்கில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், செங்கோல் கதையின் கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் பட தயாரிப்பு நிறுவனம் சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தார். சர்கார் படத்தின் டைட்டில் கார்டில் செங்கோல் கதாசிரியர் வருண் ராஜேந்திரனின் பெயர் போடவும் பட தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
சர்கார் பட கதை தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் – காதாசிரியர் வருண் ராஜேந்திரன் இடையே சமரசம் ஆன செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. இந்த செய்தியை அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். தற்போது #sarkarstorytheft என்ற ஹாஸ் டாக் இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.