இந்திய திரையுலகில் முன்னணி நடிகர் நடிகையாக இருக்கும், தீபிகா படுகோனேவுக்கும் நடிகர் ரன்வீர்சிங்குக்கும் சமீபத்தில் இத்தாலியில் திருமணம் நடந்தது. திருமணத்தை முடித்து விட்டு இருவரும் மும்பை திரும்பி உள்ளனர். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இந்த நிலையில் திருமணத்தில் மத சடங்கை மீறி இருப்பதாக சீக்கிய அமைப்புகள் சர்ச்சையை கிளப்பி உள்ளன.
தீபிகா படுகோனே கர்நாடகாவை சேர்ந்தவர். எனவே திருமணத்தை கொங்கனி கலாசார முறையிலும் ரன்வீர் சிங் சீக்கிய மதத்தை சேர்ந்தவர் என்பதால் சீக்கிய முறைப்படியும் 2 தடவை நடத்தினர். சீக்கிய முறையிலான திருமணத்தை சீக்கிய மத குருமார்களை வைத்து நடத்தினார்கள். இந்த திருமணத்தில் மத விதி மீறல் நடந்துள்ளதாக இத்தாலியில் உள்ள சீக்கிய சமூக தலைவர் சுக்தேவ் சிங்க் குற்றம் சாட்டி உள்ளார்.
இது பற்றி சீக்கிய சமூக தலைவர் சுக்தேவ் சிங் கூறியதாவது : சீக்கிய மத திருமணத்தை சீக்கிய குருத்வாராவில் மட்டுமே நடத்த வேண்டும். ஓட்டல் மற்றும் ரிசார்ட்டில் திருமணத்தை நடத்த கூடாது. தீபிகா படுகோனே-ரன்வீர் சிங் திருமணம் சீக்கிய மத கொள்கைகளுக்கு எதிராக நட்சத்திர ஓட்டலில் நடந்துள்ளது. இதுகுறித்து சீக்கிய குருத்வாரா கமிட்டியிடம் புகார் செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.