கர்நாடகா முதல்வர் எடியூரப்பா குறித்த வீடியோ சமீபத்தில் வெளியாகி சர்ச்சையான நிலையில், தொகுதி மேம்பாட்டிற்காக எடியூரப்பா ரூ. 1000 கோடி கொடுத்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ., கூறிய கருத்து கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி அரசுக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்த விவகாரத்தில், பாஜ., தலைவர் அமித்ஷா மேற்பார்வையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக, கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கூறும் வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து நாராயண கவுடா கூறியதாவது: குமாரசாமி ஆட்சி கவிழ்வதற்கு முன், காலை 5 மணிக்கு என் வீட்டிற்கு வந்த சிலர், என்னை எடியூரப்பா இல்லத்திற்கு அழைத்து சென்றனர். அவர் மீண்டும் முதல்வர் ஆவதற்காக தன்னை ஆதரிக்கும் படி எடியூரப்பா என்னிடம் கூறினார்.
அப்படியெனில், என் தொகுதி மேம்பாட்டிற்கு ரூ.700 கோடி ஒதுக்குங்கள் என கேட்டேன். அவர், ரூ. 1000 கோடி தருவதாக கூறினார். அவ்வளவு பெரிய மனிதரை நான் ஆதரித்தேன். ஆனால், தகுதிநீக்க எம்.எல்.ஏ.,க்களுடன் தங்களுக்கு தொடர்பு இல்லை என அவர் கூறிவருகிறார். இவ்வாறு நாராயண கவுடா கூறினார். ஏற்கனவே வீடியோ விவகாரத்தில் எதிர்கட்சிகள் நெருக்கடி கொடுக்க தயாரான நிலையில், எம்.எல்.ஏ.,வின் இந்த பேச்சு ஆளும்கட்சிக்கு மேலும் நெருக்கடியாகி உள்ளது.