சென்னை: எழுத்துலகின் ஜாம்பவானான பாலகுமாரன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்று இறந்தார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள், கலைத்துறையினர், அரசியல் கட்சியினர் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து பாலகுமாரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; பாலகுமாரனின் இழப்பு எழுத்துலகத்தின் மீது விழுந்த இடி. என் வயிறு வரைக்கும் வருத்தம் கெட்டிப்பட்டுக் கிடக்கிறது. மூளைச் சோம்பேறித் தனமில்லாத முழுநேர எழுத்தாளனைக் காலம் கவர்ந்து கொண்டது.
தொழில் நுட்பத்தின் வல்லாண்மையால் வாசிப்பை விட்டுத்தப்ப நினைத்த ஒரு தலைமுறையை, சட்டையைப் பிடித்து, “உட்கார்ந்து வாசி; பிறகுயோசி” என்று உலுக்கியவர்களில் பாலகுமாரனும் முக்கியமானவர்.
மரணத்தை வெல்ல வேண்டும் என்பதே விஞ்ஞானத்தின் நீண்ட நாள் விருப்பம். ஆனால் அந்தப் போட்டியில் விஞ்ஞானத்தை விடக் கலைதான் வெற்றி பெற்றிருக்கிறது. தன் கலையை முன் வைத்து ஒரு படைப்பாளன் தன் மரணத்தை வென்று விடுகிறான். அந்த வகையில் பாலகுமாரன் தன் படைப்புகளால் மரணத்தை வென்று நீண்டகாலம் தமிழோடு வாழ்ந்திருப்பார்.
அவரது குடும்பத்தாரும் வாசகர் உலகமும் அமைதியுறுக என்று என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எழுத்தாளர் பாலகுமாரன் சிந்து பைரவி – நாயகன் – காதலன் – பாட்ஷா – இது நம்ம ஆளு – ஜீன்ஸ் – குணா உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். பாட்ஷாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசும் ‘‘நான் ஒரு தடவ சொன்னா… நூறு தடவ சொன்னாமாதிரி… பஞ்ச்க்கு சொந்தகாரர் பாலகுமாரன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.