சென்னை: ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து 2003ம் ஆண்டு வெளிவந்த சாமி படம் மாஸ் ஹிட் ஆனது. இப்படம் இயக்குனர் ஹரிக்கு மட்டுமின்றி நடிகர் விக்ரம், நடிகை திரிஷா உள்ளிட்ட பலருக்கும் பெயர் வாங்கி கொடுத்தது.
இந்நிலையில், சாமி படத்தின் இரண்டாம் பாகம் சாமி-2வாக அதே கூட்டணியில் 15 வருடங்களுக்கு பின்னர் உருவாகியுள்ளது. இதில், விக்ரமுக்கு ஜோடியாக திரிஷாவுக்கு பதில் கீர்த்திசுரேஷ், வில்லனாக பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் அறிவிப்பு வெளிவந்த நாள் முதலே படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வந்தது. தொடர்ந்து படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் என்று ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், ரிலீசுக்காக காத்திருக்கிறது. ஆனாலும், படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பதால் விக்ரமின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சாமி-2 படம் ரிலீஸ் தேதி எப்போது என்று அவர்கள் பாணியில் மீம்ஸ் மூலம் கேட்டுள்ளனர்.
மேலும், தயாரிப்பு நிறுவனம் சார்பில் செப்டம்பர் ரிலீஸ் என்று மட்டுமே அறிவித்துள்ளது. தேதி அறிவிக்காததால் இந்த குழப்பம் நீடிக்கிறது. இதற்கிடையே சினிமா சிபிஐக்கள் சிலர் படம் செப்.20 ஆகும் என்றும் கூறி வருகின்றனர்.