சர்கார் படத்தில் தமிழக அரசு பார்க்க தவறவிட்ட முக்கிய காட்சி!

சென்னை: சர்கார் படத்தில் நடிகர் விஜய் 22 இடத்தில் புகைப்பிடிப்பது போன்று காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து திரைப்படங்களில் நடிகர்கள் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் நடிகர் சங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் திரைத்துறைக்கு நீங்கள் ஆற்றிவரும் பணிகளுக்காக நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அண்மைக்காலமாக திரைப்பட நடிகர்கள், குறிப்பாக கதாநாயகர்கள் தங்களின் பிரபலத்தை சமூகச் சீரழிவுக்காக பயன்படுத்துகிறார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

உதாரணமாக, அண்மையில் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் படமான சர்காரில் தொடக்கம் முதல் இறுதி வரை நடிகர் விஜய் ஏராளமான காட்சிகளில் புகைப்பிடித்திருக்கிறார். சர்கார் திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில் தொடங்கி இறுதிக் காட்சி வரை சுமார் 5 தருணங்களில் மொத்தம் 22 முறை புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது இடத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சி வலிந்து திணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்துக்கும் மிகப்பெரிய வில்லனாக உருவெடுத்திருப்பது புகைப் பழக்கம் தான். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் பேர் புகைப்பழக்கத்தால் உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி இறப்போர் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமாகும்.
இத்தகைய கொடிய வில்லனை எதிர்த்து போராடுபவர்கள் தான் கதாநாயகர்களாக போற்றப்படுவார்கள்.

ஆனால், கதாநாயகர்களாக தங்களைக் காட்டிக்கொள்பவர்கள் புகை வில்லனுக்கு புகழ்பாடுபவர்களாக நடந்து கொண்டால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. திரைப்படத்தில் வரும் காட்சிகளால் இளைஞர்கள் புகைக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பதால் தான் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் புகைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததை எதிர்த்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.

எனவே, பொதுநலன் கருதி தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கும்படி அறிவுறுத்த வேண்டுகிறேன். முடிந்தால், இதை நடிகர் சங்கத்தின் அடிப்படை விதியாகவே கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை ஆராயும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் நகல்கள் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் கருணாஸ், பொன் வண்ணன் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news