விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முடியவில்லை…

சந்திராயன் 2 திட்டத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரை, கடந்த 7ஆம் தேதி அதிகாலை நிலவில் தரையிறக்கும் முயற்சி நடைபெற்றது. அப்போது, விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நிலவின் தென்துருவத்தில் சூரிய ஒளி தொடர்ச்சியாக படும் 14 நாட்களுக்குள், அதாவது நிலவில் ஒரு பகல் பொழுதுக்குள் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க இஸ்ரோ தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. லேண்டர் விக்ரம் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் இந்த காலகட்டத்திற்குள் தகவல் தொடர்பை மீட்டமைக்க வேண்டியது அவசியம். இந்த அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

இந்த அவகாசத்தை விட்டுவிட்டால், நிலவின் தென்துருவத்தில் இரவுப் பொழுதாகி சூரிய ஒளி கிடைக்காது. இதனால் லேண்டர் இயங்குவதற்கு தேவையான சக்தி கிடைக்காது என்பதோடு, நிலவின் தென்துருவத்தில் கடுங்குளிர் நிலவும். நிலவில் இரவுப் பொழுதும், பூமியில் 14 நாட்களுக்கு சமமாகும். எனவே, 14 நாட்களுக்குப் பிறகு, லேண்டர் விக்ரமின் நிலை எப்படி இருக்கும் என்பது உறுதிபடத் தெரியாது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், லேண்டருடனான தகவல் தொடர்பை மீட்டமைக்க முடியவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். அதேசமயம், நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டர் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அதில் உள்ள 8 கருவிகளும் அவற்றிற்குரிய பணியை துல்லியமாக செய்து வருவதாகவும் சிவன் கூறியுள்ளார். விண்வெளிக்கு இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ கவனம் செலுத்தி வருவதாகவும் சிவன் குறிப்பிட்டுள்ளார்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news