விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.யு.அருண் குமார். இரண்டாவதாகவும் விஜய் சேதுபதியை வைத்து சேதுபதி படத்தை இயக்கினார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. எனவே, மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கெனவே இறைவி படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது. மேயாத மான் படத்தில் மிகப்பெரிய கவனம் ஈர்த்த விவேக் பிரசன்னா, முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாகுபலி 2 படத்தை வெளியிட்ட கே புரொடக்ஷன்ஸ் மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் யு1 ரெக்கார்ட்ஸ் இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.
யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். கடந்த மே 25-ம் தேதி இதன் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியது. குற்றாலம் மற்றும் தென்காசி பகுதிகளில் 30 நாட்கள் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், அடுத்ததாக தாய்லாந்தில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இங்கு மொத்தம் 40 நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி நான்காவது முறை யுவன் சங்கர் ராஜா இசையில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஏற்கனவே தர்மதுரை, இடம் பொருள் ஏவல், சூப்பர் டீலக்ஸ் ஆகிய விஜய் சேதுபதி படங்களுக்கு யுவன் இசையமைத்திருக்கிறார். இதில் சூப்பர் டீலக்ஸ் மற்றும் இடம் பொருள் ஏவல் படங்கள் வெளியிட்டிற்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.